Thursday, January 9, 2014

என்.ராம் வருந்தவும் இல்லை…திருந்தவுமில்லை….



லசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர்கள். ஆனால் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு. இருவரில் ஒருவர் இன்று உயிருடன் இல்லை. 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த நாட்களில் அதை கண்டித்து, இந்த போர் தமிழர்களை சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என்று எழுதியதால் சிங்கள அரசின் துப்பாக்கிச் சூடுக்கு பலியானவர் லசந்தா. ஆசியாவின் பத்திரிக்கை வரலாற்றில் இவருக்கு நிச்சயம் இடமுண்டு. மற்றவரான என்.ராமோ இலங்கையில் இன அழிப்புப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2014, ஜனவரி 1 ஆம் தேதி ’தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு வழங்கியப் பேட்டியில் தான் முதல் முறையாக ”இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஓர் இந்திய அரசியல்வாதி போல் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் ஈழப் போராட்டம் குறித்து அவர் கூறிய அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும். எனினும், போராட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சில கருத்துகள் மட்டும் இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்து….

இது குறித்த கேள்வி அவரிடம் முன் வைக்கப்படும் போது எச்சரிக்கையாக இனக்கொலை குற்றம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் என்று சொல்லும் பொழுது தான் அதற்கு சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் என்று இருவரையும் காரணம் சொல்லி குற்றத்தைச் சமப்படுத்த முடியும். நல்ல வேளையாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு தி இந்து பத்திரிக்கை சொல்லி வந்த ‘zero civilian casualities’, ’humanitarian rescue operation’ ,’war on terror’ என்ற பல்லவியைக் கைவிட்டுவிட்டார்கள். போர் முடிந்தவுடன் இலங்கை சென்று வந்து ’ Visiting the Vavuniya IDP camps: an uplifting experience’ என்று என்.ராம் தன் கைப்பட எழுதி இந்திய மக்களிடம் உருவாக்கிய கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது. ஆனால் இந்த நான்காண்டுகளில் வெளிவந்த டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை(1), ஐ.நா. செயலர் பான் கீ முனால் நியமிக்கப்பட்ட மார்சுகி தாருசுமன், ஸ்டீபன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு முன் வைத்த அறிக்கை(3), அண்மையில் ஜெர்மனியில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு(2), சானல் – 4 தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்த ஆவணங்கள் என்று அடுத்தடுத்த அதிர்ச்சியை என்.ராம் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. சானல்-4 இன் கேலம் மேக்ரே போர்க்குற்றங்களை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. ”எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம். போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.” என்று வாசகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் என்.ராம் போன்றவர்களின் ஊடக அறத்தையும் அம்பலப்படுத்தி உள்ளார். இன்றும் தி இந்துவின் நிருபராக இலங்கையில் பணியாற்றிவரும் இராதாகிருஷ்ணன் மட்டும் தான் போர்க் காலத்தில் மிக சுதந்திரமாக போர்ப்பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு வெளிநாட்டு ஊடகர் ஆவர். ஆனால் அவராலும் அவர் சார்ந்திருக்கும் ஊடகமும் வேண்டுமென்றே எந்தப் போர்க்குற்ற ஆவணத்தையும் வெளியே விடவில்லை, ஏனென்றால் அது நண்பர்.இராஜபக்சேவிற்கு சங்கடத்தை உருவாக்குமல்லவா....போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்திய மக்கள் மேற்குலக ஊடகங்களை எதிர்நோக்கி இருக்க வேண்டி இருக்கின்றது.



எப்படியோ, என்.ராம் வாயில் இருந்து முத்து உதிர்ந்துவிட்டது. ’போர்க்குற்றங்கள் நடந்துள்ளது’ என்று சொல்லிவிட்டார். அதே நேரத்தில் இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளைப் பொறுப்பாக்கும் நோக்கத்தோடு ‘பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு’ என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன்.” என்று தன்னுடைய பதிலைத் தொடங்குகின்றார். தமிழர்களின் 60 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் சிங்களப் பேரினவாதம் தான். சிங்களப் பேரினவாதம் தான் இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக்கி நாட்டைவிட்டு வெளியேறச் செய்தது. அது தான் பல இலட்சம் மக்களைக் கொன்றொழித்து இலங்கையில் இன சுத்திகரிப்பு செய்து வருகின்றது. அது தான், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்தது. இனியும் மக்களை வீதிக்கு இழுத்து வந்து போராட வைக்கப் போகின்றது. ஆனால் சிங்களப் பேரினவாதத்தைப் பற்றி பேச மறுத்து இந்திய மக்களை முட்டாளாக்கி வருகின்றது ’தி இந்து’.


சந்திராகாவிடமிருந்து சிங்கள ரத்னா விருதை பெறுகின்றார் திருவாளர்.என்.ராம்...

நடந்த படுகொலைகளைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று சொல்வதன் மூலம் இனக்கொலை என்பதை மூடி மறைத்து ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு’ என்ற தங்கள் அரசியல் விருப்பங்களை நியாயப்படுத்த நினைக்கின்றார் என்.ராம். சி.பி.எம் கட்சியின் நிலைப்பாடும் இதுவாகத் தான் இருக்கின்றது. இந்த படுகொலைகள் விசாரணைக்குள்ளானால் இன அழிப்புக்கு உள்ளான மக்களுக்கு அரசியல் நீதி என்ற வகையில் தம்மை பாதுகாத்துக் கொள்ள தனியரசு அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தினால் சி.பி.எம். மும், என்.ராமும் போர்க்குற்றம் என்றும், உள்நாட்டு விசாரணை என்றும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டுகளில் 1,46,679 பேர் காணவில்லை என்று மன்னார் பிஷப் இராயப்பு ஜோசப் அறிக்கை வெளியிட்டுள்ளார்(4). 2009 ஜனவரி முதல் 2009 மே வரையிலான காலகட்டத்தில் மட்டும் 40000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை சொல்கின்றது. இந்தியாவின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தப் போரில் 65000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்று அண்மையில் பேசி உள்ளார்(5).

1983 ஆம் ஆண்டு ஜீலை மாதம் நடந்த இனக்கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர். அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் அதையே ’இனப்படுகொலை’ என்று இலங்கையைக் கண்டித்தார். அதே கருத்தைத் தான் இன்று இந்தப் பேட்டியில் என்.ராம் சொல்கின்றார். ஆனால், 2009 ஆம் ஆண்டு முடிந்தப் போரில் சிங்கள இராணுவம் செய்த படுகொலைகளை ’மனித உரிமை மீறல்’ என்கின்றார். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைதான் ’தி இந்து’ மற்றும் தன்னுடைய கொள்கை என்று அவரே ஒப்புக்கொள்வதற்கிணங்க இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்றாற் போல் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி மார்க்சியத்தின் பெயராலும் சர்வதேசியத்தின் பெயராலும் ஒரு தேசிய இனத்தை இல்லாதொழிக்கும் வேலையை தி இந்து செய்து வருகின்றன.


போர் முடிந்த இந்த ஐந்தாண்டுகளில் எவ்வித உள்நாட்டு விசாரணையையும் இலங்கை அரசு தொடங்கவில்லை. மாறாக போரில் பங்குபெற்ற இராணுவ தளபதிகளை வேக வேகமாக ‘diplomatic immunity’ உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச பொறுப்புகளில் அமர்த்திக் கொண்டிருக்கின்றது(6). இறுதிப் போர் மட்டுமல்ல, இதற்கு முன்னர் ந‌டந்த இன அழிப்புக் குற்றங்கள் எதற்கும் முறையான விசாரணை செய்து குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கிய வரலாறு ஏதும் இல்லாத நிலையில் இராசபக்சேவுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்.ராம். இராசபக்சே இதுவரை சிங்கள இராணுவம் போர்க்குற்றங்கள் செய்துள்ளன என்று சொல்லவும் இல்லை. அதை நேர்மையான வகையில் விசாரிக்கத் தயார் என்று உறுதியளிக்கவும் இல்லை. அப்படி சொன்னால் சிங்களப் பேரினவாத பூதம் அவரை தூக்கியெறியும். எனவே ஒருநாளும் தன்னாட்டு இராணுவ வீரர்கள் மீதொரு நேர்மையான விசாரணைக்கு அவர் முன்வரப் போவதில்லை.




அரசியல் தீர்வு குறித்து…

”ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்” - கிழக்குப் பகுதியில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள் என்று சொல்கின்றார். இதுதான் 1948 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய போது இருந்த நிலையா? 1987 ஆம் ஆண்டு இருந்த நிலை என்ன? எந்த அடிப்படையில் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று இந்திய இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்த வரைவில் என்.ராமுக்கும் பங்கிருக்கின்றது அல்லவா? அந்த ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு இசைவு உண்டா? என்று கிழக்கு பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை நடத்துமாறு வலியுறுத்த என்.ராமுக்கும், இந்திய அரசுக்கும் துணிவு உண்டா? 1948 ஆம் ஆண்டிற்கு பின் நடந்த சிங்களக் குடியேற்றங்களை மூடி மறைத்துவிட்டு கிழக்குப் பகுதியின் மக்கள் தொகை விகிதம் பற்றி பேசுகின்றார் என்.ராம். இப்போது வடக்கிலும் சிங்களமயமாக்கி வருகின்றார்கள். வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படுவதை சிங்களப் பேரினவாதம் செய்து வருகின்றது. அப்போது என்.ராம் இன்னும் அழுத்தமாக கிழக்கிலும் வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மையினர் என்றும் தனிநாட்டிற்கு தேவையான தாயகம் இல்லை என்றும் வாதிடக் கூடும். தாயகத்தை அங்கீகரித்துவிட்டால் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தாக வேண்டும். எனவே தான் என்.ராம் சிறுபான்மை மக்களாக தமிழர்களைக் காட்ட முயல்கின்றார். தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப உண்மையைத் திரித்தும் குறைத்தும் மறைத்தும் பேசுவதைத் தான் வழமையாக செய்து வருகின்றார் என்.ராம்.



”அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது”

தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை என்று சொல்வது தான் தன்னை இடதுசாரிகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் சி.பி.எம் காரர்களின் மார்க்சியப் பார்வையாக இருக்கின்றது. ஆனால். என்.ராம் தன்னுடைய பேட்டியில் எங்குமே சிங்கள அரசிடம் உள்ள பேரினவாதம் பற்றி பேசத் தயாராக இல்லை. இது தான் அவருடைய சிங்கள அரச சார்பைக் காட்டி நிற்கின்றது. சி.பி.எம் கட்சிக் கூட சிங்கள இனவாதம் குறித்துப் பேசுவது இல்லை. அதைவிட சிங்களப் பேரினவாதம் எப்படி வளர்ந்து நிற்கின்றது என்ற எந்த வரலாற்று அறிவும் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதே வருத்தத்திற்கு உரிய உண்மையாக இருக்கின்றது. அவர்களிடம் முரண்பாட்டில் உள்ள இரண்டு கூறுகளையும் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற இயங்கியல் பாடத்தை யாராவது சொல்லிக் கொடுத்தால் நன்று.


”ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.” – என்று இலங்கையின் இனமுரண்பாட்டிற்கான அரசியல் தீர்வை சி.பி.எம் கட்சியும், என்.ராமும் சொல்லி வருகின்றார்கள். கடந்த நான்கு சதாப்தங்களாக அவர்கள் இதை தான் சொல்லிவருகின்றார்கள். இலங்கை அரசமைப்பின் இரண்டாம் உறுப்பில் இருக்கும் ’ஒற்றையாட்சி’ தான் அவர்கள் சொல்லும் அதிக பட்ச அதிகாரப் பகிர்வாம், சுயாட்சிக்கு தடையாய் இருப்பது. அதை மாற்றுவதற்கு சிங்கள மக்களிடம் வாகெடுப்பு நடத்தியாக வேண்டும். 13 ஆம் சட்டத்திருத்தத்தின்படி காணி, போலீஸ் அதிகாரம் கூடத் தருவதற்கு இராசபக்சே தயாரில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருந்தாலும் என்.ராமும், சி.பி.எம் கட்சியும் இந்த ஒற்றையாட்சி முறையை மாற்றுவது குறித்து ஆக்கப்பூர்வமான போராட்டங்களையும், கருத்துருவாக்கத்தையும் நடத்துவதற்கு தயாரா ?.


”தமிழீழம் சாத்தியமில்லை“ என்றும் நூறாண்டுகளுக்குப் பின்னான இந்தியாவைப் பற்றியும் எதிர்வு கூறியுள்ள என்.ராமுக்கு ஒரு சிறு தகவல். 1990 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 26 புதிய அரசுகள் இப்பூமி பந்தில் தோன்றியுள்ளன(7). வரலாற்றின் வளர்ச்சி விதிகள் உங்கள் விருப்பங்களுக்கு எதிராக இருக்கின்றன.


2008 ஆம் ஆண்டு தான் சி.பி.எம். கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உணர்ந்தது. இதற்கு முன்னரும் பல பணிகளை சி.பி.எம் செய்திருந்தாலும், தனிப்பட்ட கவனம் செலுத்தி ஒரு உள் அமைப்பை ஏற்படுத்தியது 2008ல் தான்...அது போல் என்.ராமும் சாதி எதிர்ப்பில் தங்கள் பங்களிப்பு குறித்து இந்த பேட்டியிலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:

“சாதி நம் நாட்டின் பெரும் சாபம். அதை ஒழிக்க வேண்டிய கடமை எல்லோருக்குமே இருக்கிறது. முக்கியமாக ஊடகங்களுக்கு. ஒரு காலகட்டம் வரை நாம் போதிய கவனம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது அதன் போதாமை புரிகிறது. அதே சமயம், இதற்கான பின்னணியில் பல காரணிகள் உண்டு……. அப்புறம், இந்தத் தொழிலில் ஏனையோருக்கு இல்லாமல் இருந்த பிரதிநிதித்துவம். இன்றைக்கும் பத்திரிகைத் துறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இப்படிப் பல காரணிகள். ஆனால், இப்போது சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். ” – இதில் தங்கள் அரசியல் நேர்மையின்மையை சுயவிமர்சனம் செய்யாமல், தலித் மக்கள் அதிகம் ஊடகத்துறையில் இல்லாததை எல்லாம் ஒரு காரணமாக சொல்கின்றார்.

தங்களை இடதுசாரிகள் என்று காட்டிக் கொண்டு ஒடுக்கப்படும் மக்களின் போராட்ட நியாத்திற்கு துணை நிற்காமல், ஒடுக்கப்படும் மக்களையே பிரச்சனைக்கு என்.ராம் குற்றம் சுமத்திவருகின்றனர். இப்படி அனைத்து வகையிலும் ஒடுக்குபவர்களுக்கு சேவகம் செய்யும் வேலையையே இவர்களைப் போன்றவர்கள் செய்து வருகின்றனர்.


ஒரு தேசிய இனத்தை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும் பொழுது இடதுசாரிகள் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும். ஆனால் இங்கே இவர்கள் ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாகவே செயல்படுகின்றனர்.

"சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது" - லெனின்...

குறிப்பு: தமது நிலைப்பாடே புலி எதிர்ப்பு என்ற ஒப்புதல் வாக்குமூலம் தந்த பின்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும், அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் என்.ராம் சொல்லிய கருத்துகளுக்கு இக்கட்டுரையில் பதிலளிக்க தேவையில்லை என்று கருதுகின்றோம்.


செந்தில்
ஒருங்கிணைப்பாளர் - சேவ் தமிழ்சு இயக்கம்

2,3 புகைப்படம்:மே 17 இயக்கம்.

த‌ர‌வுக‌ள்:
1) http://ptsrilanka.org/
2) http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/426-sri-lanka-guilty-of-genocide-against-tamils-with-uk-us-complicity-ppt-rules
3) http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf
4) http://mannardiocese.net/details.php?content=Statements_Reports
5) http://tamil.oneindia.in/news/tamilnadu/india-won-t-rest-till-implementation-13th-amendment-pc-188570.html#slide435856
6) http://www.thesundayleader.lk/2011/01/23/the-militarisation-of-sri-lanka%E2%80%99s-diplomatic-and-administrative-services/
7) http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=776c764a-4d05-4528-8a4f-e44285eba9fd

No comments:

Post a Comment